
பள்ளிஅக்ரஹாரம்
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்.
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க.
தஞ்சைமாவட்டம் வெண்ணாற்றங்கரை வடகரை பள்ளிஅக்ராஹாரத்தில் லக்ஷ்மிராஜபுரம்
அருள்மிகு ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தளிகேஸ்வர திருக்கோயில்
புனருத்தாரனத்திற்கான விக்ஞாபனப் பத்திரிகை
ஆலய வழிபாடு செய்வோரின் வசதிக்காக கோயிலின் அமைவிடம், மூர்த்திகள், தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்புகள், கோயில் தொடர்பான புராண இலக்கிய நிகழ்வுகள், நிர்வாகம் பற்றிய செய்திகளை இணைத்த்துள்ளோம்.
ஆன்மீக அன்பர்களுக்கு பயனுள்ளதாக இது அமையும்.
திருப்பணி தங்கு தடையின்றி நடைபெற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொருள் உதவி செய்து திருப்பணியில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
Contact us 🕉️
இங்கனம்,
பரம்பரை அறங்காவலர் செக்கோஜி ராஜமஹாட்டிக் ராவ் சாஹேப் குடும்பம்
பள்ளிஅக்ரஹாரம் Late நாராயணசாமி ஐயர் குடும்பம்
கிராம பொதுமக்கள், பள்ளிஅக்ரஹாரம் மற்றும் தஞ்சாவூர்.
ஸ்தல பாடல்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ ப3ந்து4ஶ்ச ஸகா2 த்வமேவ |
த்வமேவ வித்3யா த்3ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தே3வ தே3வ
( ஸ்ரீ குரு ஸ்தோத்திரம் குரு வந்தனம் )
************************************************
தர்மாதர்த்தப் பிரபவதி தர்மாத் ப்ரபவதே ஸுஹம்
தர்மேன லபதே சர்வம் தர்மசார மிதம் ஜகத்
( வால்மீகி ராமாயணம் ஆரண்ய காண்டம்,
ஸீதை ராமனிடம் தர்மத்தின் சிறப்பை பற்றி உரைத்தது )
************************************************
அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே
( திருநாவுக்கரசர் அருளிய ஸ்தல பாடல், திருவீழிமிழலை, ஆறாம் திருமுறை )
பொழிப்புரை: பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
************************************************
சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
( திருமூலரின் திருமந்திரம், சூக்கும பஞ்சாக்கரம் )
************************************************
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.
( தேவாரம் )
************************************************
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஆலய வழிபாடு
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரம்பொருள் மானிட உயிரினங்கள்யாவும் உய்வதற்கு ஸ்தூலவடிவில் எழுந்தருளியிருந்து அருள் வழங்கும் இடமாக என்றும் விளங்குபவை கோயில்களாகும். இத்தகைய தெய்வீக திருக்கோயில்கள் சைவ வைணவ சமயங்கைளப் போற்றி வளர்த்து இந்நாட்டை கலைவளமும் ஆன்மீக வளமும் மிக்க புண்ணிய பூமியாக மாற்றியவர்கள் அரசர்கள் ஆவர்.
அவ்வரிசையில் தஞ்சை மராத்தியர் மரபில் ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி அவர்களின் தமக்கையார் லட்சுமிபாய் ராஜாமணி எனப்படும் அம்மையாரின் பெயரால் ஏற்பட்ட ஊர் லட்சுமி ராஜபுரம் எனப்படும். இந்த ஸ்தலத்தில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் அமையப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தளிகேஸ்வரர் திருக்கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். கோயிலில் நித்ய வழிபாடு , லட்சுமிபாய் ராஜாமணி அம்மாள் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது என்பது வரலாற்று குறிப்பு. அவர்கள் திருக்கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு நிலைகளில் பித்தளை தகடு போர்த்தி திருப்பணிகளும் செய்துள்ளார்.
இந்த திருக்கோயிலின் சிறப்புகளை காணும் முன் இக்கோயிலின் குடமுழுக்கு முழுமையாக நடைபெற்று 108 வருடங்கள் கடந்ததால் தற்போது திருப்பணி வேலைகள் செய்து அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்விக்க அனைவராலும் முயற்சிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அனைவரும் இந்த திருப்பணியில் பங்குபெற்று ஈசன் அருள் பெற வேண்டுகிறோம்.
ஸ்தல அமைவிடம்
அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் வரலாறு ஸ்தலத்தின் அமைவிடம். இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் கடந்தவுடன் வெண்ணாற்றங்கரை பாலத்தை கடந்தவுடன் பள்ளிஅக்ரஹாரம் கிராமம் காணப்படும். வலதுபுறம் 2 கிலோமீட்டர் தூரத்தில் வடகரையை ஒட்டி இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற 275 ஸ்தலங்களில் ஒன்றாகவும் வடகரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் மற்றும் மராட்டிய, நாயக்கர் மன்னர்களின் கலை நுட்பத்தினை பறைசாற்றும் தொன்மை பொலிவுடன் இன்றும் இத்திருக்கோயில் கம்பீரமாய் நிலைத்து நிற்கின்றது.
இத்திருக்கோயிலை சுற்றி அமைந்த குறிப்பிடத்தகுந்த பிற கோயில்கள்:
1. வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயில்,
2. திவ்யதேசங்களில் ஒன்றான நீலமேக பெருமாள் கோயில்,
3. வெண்ணாற்றங்கரை தென்கரை தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்
4. மாரியம்மன் கோயில்

திருக்கோயில் அமைப்பு
வெண்ணாற்றின் வடகரை ஓரமாக கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 3 நிலைகளை கொண்டது. வெண்ணாற்றின் படித்துறையை ஒட்டிய தெற்கு கோபுரமும் 3 நிலை உடையதாகும். கிழக்கு வாயிலின் எதிர் நிலையில் அழகிய திருக்குளம் நீர் இன்றி காட்சி அளிக்கின்றது. வெண்ணாற்றில் நீர் செல்லும் போது இந்த திருக்குளத்தில் நீர் நிரம்புமாறு அமைக்கப் பட்டிருந்த நீர் தடம் சிதைந்து போனதால் திருக்குளம் தற்போது வற்றியுள்ளது. முன்னதாக, லட்சுமி ராஜ புரம் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் மற்றும் கோவிலின் தீர்த்தவாரி உற்சவங்களுக்கும் இந்த திருக்குளத்தின் புனித நீரே பயன்பாட்டில் இருந்ததாகவும் செவிவழி செய்திகள் கூறுகின்றன. மேலும் வடகரையை ஒட்டி லட்சுமிபாய் ராஜாமணி அம்மாள் அரண்மனையும் அன்னதான மண்டபமும் சீருடன் அமைந்துள்ளது. ப்ரதிதினமும் பூஜைகளும் சாதுக்களுக்கு அன்னதானமும் தவறாது நடைபெற்று வந்ததாக வரலாற்று குறிப்புகள் இயம்புகின்றன. அரண்மனையின் எதிரே மஹான் ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எனப்படும் டேம்பே ஸ்வாமிகளின் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தெற்கு மகாராஷ்டிரா சாவந்த்வாடி சமஸ்தானத்தை சார்ந்த மணகாவ் கிராமத்தில் தோன்றிய டேம்பே ஸ்வாமிகள் தனது வாழ்நாளில் பாரத தேசம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். தனது 17வது சாதுர்மாஸ்யத்தினை 1907 வருடம் வேணு நதி எனப்படும் வெண்ணாற்றங்கரையில் காவிரியின் கிளை நதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கிருஷ்ணா லஹரி மற்றும் த்விஷா ஹஸ்ரி சூர்ணிகா ஆகிய காவியங்களுக்கு விளக்கவுரை இயற்றினார். இந்த மண்டபம் சந்தியா மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. பௌர்ணமி மற்றும் சுவாமிகளின் உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானங்களும் இன்று வரையிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அக்ராஹாரத்தின் நடுவிலுள்ள திருக்கோயிலின் கிழக்குகோபுர வாசலின் உள்ளே நுழைந்தால் பலிபீடம் மற்றும் அதிகார நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் நந்தியின் தோற்றத்தை ஒட்டிய நந்தியும் மண்டபத்தின் மேற்கு மூலையில் கணபதியும் வடக்கு மூலையில் சனிஸ்வரனும் ஸ்வாமியை நோக்கியவாறு அமைக்க பட்டுள்ளது. தனியாக நவகிரஹ மண்டலம் இன்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்ற வரிகளுக்கு ஏற்ப எம்பெருமானே இங்கு அனைத்து சக்தியாகவும் இருப்பது கோயிலின் தனி சிறப்பு. நந்தி மண்டப தெற்கு மதிலின் உட்புறம் பல ஆண்டுகளாக அன்னதானம் செய்தருளிய மடைப்பள்ளியும், வடக்கு மதிலில் இணைந்த கண்ணாடி மண்டபமும் காட்சி அளிக்கின்றன. கிழக்கு மதிலின் உள்புறம் ஸ்வாமியை நோக்கியவாறு சூர்யன் மற்றும் யோக பைரவரின் மண்டபங்கள் அமைக்க பட்டுள்ளது. அதிகார நந்தி மண்டபத்தின் தூண்கள் நாயக்கர் மன்னர் கால முறைப்படியும் அங்கு காணப்படும் வண்ண பூச்சுகள் மராட்டிய முறைப்படியும் ராஜகோபுரம் மற்றும் மண்டப கூரைகள் மற்றும் சுதை சிற்பங்களும் நமது சோழ காலத்து முறைப்படியும் சேர்ந்து தனி பொக்கிஷமாக இன்றும் சிறந்து விளங்குகின்றது.
அதிகார நந்தியை கடந்து த்யான மண்டபத்தினுள் நுழைந்தால் கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி பலிபீடம் மற்றும் நந்தியுடன் காட்சிஅளிக்கின்றார். எப்போதும் நாக படத்துடன் இருப்பதால் இக்கோயில் நாக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகின்றது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு வாயிலில் புற்று இருந்ததாகவும் அதில் இரு நாகங்கள் வசித்ததாகவும் மக்களால் பூஜை செய்யப்பட்டுவந்ததாகவும் புற்று தற்போது நசிந்துள்ளதாகவும் ஒரு நாகம் மட்டும் கோயிலின் உள்ளே சில முறை காணப்படுவதாகவும் ஊர் மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுகின்றது.
ஸ்வாமி கருவறையின் வாசலில் 10 அடி உயரம் கொண்ட த்வார பாலர்களின் வண்ணமிகு சுதை சிற்பங்களும் மேல் நிலையில் ரிஷப வாகனத்தில் எம்பெருமானும் பிராட்டியாரும் அமர்ந்தகோலத்தில் ரிஷிகளுக்கு காட்சியளிக்கும் வண்ண சிற்பங்களும் உள்ளன. இந்த வண்ண சிற்பங்கள் தஞ்சை அரண்மனை சிற்பங்களை ஒத்து உள்ளதென்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அம்பாள் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பாள் அபய ஹஸ்தத்துடன் விஸ்வரூபியாக காட்சிஅளிக்கின்றாள். கர்பகிரஹத்தின் வெளியில் த்வாரபாலகிகளும் மேல் நிலையில் தாமரையில் அழகுற வீற்றிருக்கும் கஜலக்ஷ்மியின் வண்ணமிகு சுதை சிற்பமும் காணலாம். ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்து தெற்கு கோபுரம் ஒட்டி மண்டபத்தின் வழியே வெளி பிரகாரத்தில் நுழைந்தால் மேற்கு சுற்றில் ஆலய மதிலை ஒட்டிய மண்டபம் அந்நாளில் திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்த நெல் சேமிப்பு கிடங்காகவும் கோயில் கணக்காயர் அலுவலகமாகவும் மற்றும் கோயில் கோசாலைக்கான தீவன கிடங்காகவும் இருந்ததாக அறியப்படுகிறது. ஸ்வாமி கர்பக்கரஹ மண்டபம் அழகிய கஜபிருஷ்ட வடிவில் சுதை சிற்பங்களுடனும் ஸ்தலவ்ரிக்ஷமான வில்வமரமும் காட்சிஅளிக்கின்றது.
தெற்கு நோக்கிய மாடத்தில் யோக தக்ஷிணாமூர்த்தியின் சன்னதி தனி விமானமுடன் அழகுற காட்சி அளிக்கின்றது. வடக்கு பிரகார மதில் மண்டபத்தில் முறையே ஸ்தல விநாயகர் சன்னிதி, பிரகார லிங்கம் சன்னிதி, வள்ளி தேவசேனாபதி சன்னிதி மஹாலக்ஷ்மி சன்னிதி மற்றும் நாகர் லிங்கம் சன்னிதியும் தனித்தனியாக அழகுற அமைந்துள்ளது. நீண்ட கீழ்மதிலின் கோடியில் நடராஜர் பளிங்கு மண்டபம் மற்றும் மதில் சுவர் முழுதும் இரட்டை நந்தி சிலைகளுடன் காணப்படுகின்றது.
ஸ்வாமி சன்னதியின் வடக்கு மாடத்தில் துர்க்கையின் சன்னிதியும் எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் அழகுற உள்ளன. இத்திருக்கோயில் தனி நவகிரஹ சன்னிதியும் மற்றும் 63 நாயன்மார்களின் சிற்பங்களோ இல்லாதது தனி சிறப்பு.
இத்திருக்கோயிலை ஸ்தாபித்த லட்சுமி பாய் மற்றும் அவரின் குடும்பத்தினர் த்யான மண்டபத்தின் கிழக்கு மற்றும் தெற்கு நிலை படிகளுக்கு பித்தளை தகடு போர்த்தியது மட்டுமின்றி 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற சொற்களுக்குட்பட்டு தங்கள் உருவசிலை எப்போதும் ஸ்வாமியை தரிசித்த வண்ணமே நின்ற கோலமாக வடிவமைத்து உள்ளனர்.
ஸ்தல விருக்ஷம்
13 ஆம் நூற்றாண்டை சார்ந்த இக்கோயிலின் ஸ்தலவிருக்ஷமாக வில்வம் விளங்குகின்றது. தெற்கு பிரகாரப் பகுதியில் ஒன்றும் வடக்கு பிரகாரப் பகுதியில் ஒன்றுமாக இரட்டை வில்வமரங்கள் வாய்த்திருப்பது சிறப்பாகும்.
நீர்த் தடம்
திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் அக்காலத்தில் லட்சுமி தீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்குளத்தில், வெண்ணாற்று படித்துறையில் ஸ்னானம் செய்து இறைவனை தரிசிக்கும் பேரும் பெற்றனர் என்பது செவிவழி செய்தி. ஊர் மக்களுக்கும் சாதுக்களுக்கும் நித்ய அன்னதானம் நடைபெற்றதாகவும், விவசாய பெருங்குடியினர் கோயிலுக்கு ஒவ்வொரு அறுவடைக்கு படி அளந்ததாகவும், வேண்டுவோர்க்கு திருக்கோயில் திரவிய தானம் அளித்ததாகவும் கூறப்படுகின்றது. வடக்கு மதிலின் வெளியில் நெல் அளக்கும் மண்டபம் இன்றும் காணப்படுகின்றது.
நித்ய, மாத பூஜைகள் மற்றும் நிகழ்வுகள்
இத்திருக்கோயில் நாட்பூஜையாக நான்கு காலமும் தனுர் மாதத்தில் மட்டும் ஐந்து காலபூஜைகளும் நடந்து வருகின்றன. இதனை தவிர சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆணி திருமஞ்சனம், ஆடி பூரம், ஆடி பெருக்கு, வரலக்ஷ்மி நோன்பு, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்ரி, மஹாளயம், மற்றும் மூல தர்மக்கர்த்தா சாஸ்வத உபயம், ஐப்பசியில் தீபாவளிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் மற்றும் வஸ்திராலங்காரம், ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகமும், சஷ்டியில் சூரசம்ஹாரமும், தனுர் மாதம் முழுதும் ஐந்தாம் கால பூஜைகளும், தை மாத சங்கராந்தியில் சூரியனுக்கு அபிஷேகம் விசேஷ பூஜையும், தை அமவாசை மற்றும் பூரம் பூஜைகளும், மாசியில் மகம் மற்றும் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத்திலும் விசேஷ பூஜைகள், இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தவிர சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, தமிழ் வருட பிறப்பு, சனி பெயர்ச்சி திங்களில், அந்தந்த மூர்த்திக்கு பூஜைகள் செய்யப்படுகின்றது.
மேலும் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதும், அதிகார நந்திக்கு வடை மலை சாற்றுவதும் அங்கு வழக்கமாக விளங்கியது. மஹாசிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, விஜயதசமி காலங்கள் நந்தி வடைமாலைக்கு உகந்த நாட்களாகும்.
திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்
மூலஸ்தானத்தில் ஆவுடையார் கருநிறத்திலும் லிங்கம் தேன் நிறத்தில் நாகாபரணத்துடன் காட்சி அளிப்பவர். அமிர்தகடேஸ்வரர் என்னும் பெயரும் உடையவர். அபிஷேக தீர்தத்தினை அருந்துவோர் அகால மரணத்தினை வெல்வர். மஹிஷாசுரமர்தினியின் சாந்த உருவாக நின்ற நிலையில் நாற்கரத்துடன் சுகந்த குந்தளாம்பாளும் ஆறு முகத்துடனும் வள்ளி தேவசேனாபதியுடன் ஒரு கால் மடித்து ஒரு கால் தொங்கும் நிலையில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியும் தனி சந்நிதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளனர். நாகம் வணங்கிய ஸ்தலமாதலால் நாகதோஷம் மற்றும் சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலமாக இக்கோயில் போற்றப்படுகின்றது.
நிர்வாகம் மற்றும் திருப்பணி
கி பி 13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இத்திருக்கோயிலை தஞ்சை சமஸ்தானத்தை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் தனது சகோதரி திருமதி லட்சுமி பாய் ராஜாமணி மற்றும் அவரின் கணவர், திரு ராமோஜி சற்சேராவ் அவர்களுடைய கைங்கர்யத்தினால் பூஜைகள் நடைபெற்றன. கோயிலின் வடக்கு மதிலை ஒட்டி பத்து ப்ராஹ்மண குடும்பங்கள் இருந்த அக்ராஹாரம் லட்சுமி ராஜபுரம் அக்ராஹாரம் என்று அழைக்கப்பட்டது. அக்குடும்பங்களுக்கு சன்மானமாக நிலங்கள் அளிக்கப்பட்டு திருக்கோயிலின் நித்ய பூஜைகளும் அன்னதானங்களும் நடைபெற்றுவந்தது. படிப்படியாக அந்தணர் குடும்பங்கள் வெளியேறியநிலையில் லட்சுமிபாய் ராஜாமணி அம்மாள் பரம்பரையை சேர்ந்த வர்களால் தொடர்ந்து இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
கடைசியாக 2007 ஆம் ஆண்டு அப்போதைய தர்மகர்தா செக்கோஜி ராவ் மாஹாடிக் மைனர் மற்றும் கோபால்ராவ் மஹாட்டிக் முன்னிலையில் இக்கோயிலின் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், பின்னர் 2015 ஆம் வருடம் மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டது. தற்போதய தர்மகர்த்தா செக்கோஜி ராஜேமாஹாடிக் முன்னிலையில் சுகுமார் ராவ், தபேராஜா ராவ், மகேஷ் ராவ், ஆகியோர் முயற்சியினாலும் பள்ளி அக்ராஹாரத்தின் 10 அந்தணர் குடும்பங்களில் ஒன்றான Late. நாராயணசாமி ஐயர் அவர்களின் வம்சாவளி சேர்ந்த குடும்ப உருப்பினர்களினாலும் திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முழுவதுமான திருப்பணிகள் மற்றும் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரன கும்பாபிஷேகம் நடைபெற சுமார் ரூபாய் 15 லட்சம் வரை மதிப்பிடப்பட்டு வேலைகள் துரித கதியில் ஈஸ்வர அனுகிரஹத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இத்திருப்பணியில் இணைந்துகொண்டு ஈசனின் அனுகிரஹத்திற்கு பாத்திரமாகும்படி வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு.
மேலும் விவரங்களுக்கு,
நாகராஜன்
+91-9442227813
தர்மகர்த்தா செக்கோஜி
ராஜேமாஹாடிக் ராவ் சாஹேப்
+91-9944932009
மகேஷ் ராவ்
+91-9677786369